“நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை – என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு”
என்று, உலகியல் இயக்கத்திற்கு வாழ்வியல் சட்டத்தை வகுத்தளித்த தமிழ் மறை ஞானி திருவள்ளுவர் பெருமான், “நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இந்த உலகம்” என்று கூறியுள்ளார்.
அதற்கேற்ப, தனது வாழ்நாளெல்லாம் ஓடி, யாடி உழைத் துழைத்து; தமிழகத்தின் தொழில் அறிவுக்கு ஞானியாகத் திகழ்ந்த தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு அவர்கள், 04.01.1974-ஆம் ஆண்டு வரை நம்மோடு நடமாடி – காலத்தின் பசிக்கு நல்லமுதம் ஆனார்!
ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் ஆகின்றன – அவர் நம்மை விட்டு மறைந்து பிரிந்து, ஆனால், சுமார் எண்பது ஆண்டுகள் அந்த தொழிலியல் மேதை நம்மோடு வாழ்ந்து, நாடகம் பார்க்க வரும் கூட்டம் போல, சிறுகச் சிறுகச் செல்வத்தைச் சேர்த்து, அது நிலையில்லாத நீர்க்குமிழ் என்பதை உணர்ந்தும், நிலயைான – அறமான தொழிலியல், விவசாய இயல், கல்விப் புரட்சி இயல், சித்த வைத்திய இயல், விஞ்ஞான வியல் போன்ற பல்வியல்களில் நிலையான, வாழ்வியல் அறங்களைச் செய்து, நேற்று நான் இருந்தேன், இன்று மறைந்தேன் என்று கூறுமளவுக்குக் காலத்தின் புரட்சிக்கு விதையாக விளங்கியுள்ளார்.
தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு, தான் ஈடுபட்ட ஒவ்வொரு செயலையும், How to Know என்ற அடிப்படையில், ‘அறிவது எப்படி?’ என்ற தத்துவ இயலுக்கு ஏற்றபடி ஆராய்ந்து உண்மைகளை உணர்ந்து – அவற்றிலே வாகை சூடி, வாழ்ந்து காட்டி, மற்றவர்களுக்கும், இன்றும் வழி காட்டியாகத் திகழ்கின்றார்!
தத்துவஞானி, தன்னை, தனது மனத்தை, மனம் எழுப்பும் கேள்விகளுக்கு – மனமே தரும் பதில்களை, விவகார அறிவை, காரணத்தை, விவாத முடிவைத் தான் நம்புவான்; ஏற்று நடப்பான்.
ஆனால், கண்களால் காண முடியாதவற்றை விஞ்ஞானம் நம்புவதில்லை. கண்களால் காண முடியும் என்பனவற்றைப் பற்றிய ஆராய்ச்சியும் – தேடுதலும்தான் விஞ்ஞானத்தின் அடிப்படை.
எனவே, விளைவுகளை ஆராயும் விஞ்ஞானத்தின் முன்பு தத்துவ ஞானம் மங்கி இருந்தாலும்கூட, காரணங்களை வினாக்களாக எழுப்பும் தத்துவ ஞானத்தின் சிந்தனையாலும், விளைவுகளை விளக்கும் விஞ்ஞானச் சிந்தையாலும், தனது செயல் ஒவ்வொன்றையும் அறிவது எப்படி? என்ற எண்ணத்தால் புரிந்து செயல்பட்டு, தொழிற்சாலை, விவசாயம், கல்வி, மருத்துவத் துறைகளில் தனது சாதனைகளுக்குச் சான்றுகளாக தொழிற்சாலை களை, கல்விக் கோட்டங்களை, விவசாயப் பண்ணைகளை மற்ற எல்லா உலக விஞ்ஞானிகளையும் விட ஜி.டி. நாயுடு அடையாளங் களாக நிறுவிக் காட்டி, அவை இயங்கவும் வழிகாட்டி மறைந்தார்.
தாம் கண்டுபிடித்தவைகளை உலகுக்குக் கொடைகளாக வழங்கிவிட்டு மற்ற விஞ்ஞானிகள் மறைந்தார்கள்! ஆனால், நமது நாயுடுதான் தனது கண்டுபிடிப்புகளை, தனது உயிர்வாழ் காலத்திலேயே இயக்கி, மக்களையும் – அதன் மூலமாக வாழவும் வைத்தார். அதற்கு அவர் நிறுவிய பல்துறை தொழிற்சாலைகளே சான்றுகளாகும்.
‘உழைப்பின் வார உறுதிகள் உளவோ?’ என்ற மெய்ப் பொருளுக்கு ஏற்றவாறு, “உழைப்பாளர்கள் எவரும் உயர் வாழ்வை அடைவார்கள்” என்ற உண்மைக்கு இலக்கணமாக உழைப்பின் சின்னமாக வாழ்ந்து காட்டியவர் ஜி.டி.நாயுடு அவர்கள்.
அந்த மேதையின் அறிவாற்றலை, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான, சர்.சி.வி. இராமன் மட்டுமன்று, உலக நாடுகளின் அறிஞர்கள் எல்லாம் பாராட்டி வியந்தார்கள். ரேசண்ட் பிளேடு தொழில் போட்டியில் போட்டிப் போட்டுத் தோற்றார்கள்; உலக நாடுகளில் தமிழன் பெருமையை நிலை நாட்டிப் புகழ் பெற்றார் திரு.ஜி.டி. நாயுடு அவர்கள். அத்தகைய ஒரு தொழிலியல் விஞ்ஞானி ஒருவர் பற்றிய நூல்தான் இந்த நூல்!
வள்ளலார் நூலகம் இந்த நூலை வெளியிடுவதில் பெரும் பேறு பெறுகிறது. தமிழ்நாடும்; தமிழ்ப் பெருமக்களும் இந்த வரலாற்று நூலுக்கு ஆதரவு காட்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
என்.வி. கலைமணி
Dear publishers and self-publisher, kindly be informed that Book Capital & E-Sentral are now using the same publisher panel for your convenience in uploading and updating your eBook content.
If you wish to proceed to log in/ sign up, click Yes. Otherwise, kindly click the X icon to close.